யேமன் சிறைச்சாலை மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் ; 68 ஆபிரிக்க குடியேற்றவாசிகள் பலி
ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு யேமனில் ஆபிரிக்க குடியேற்றவாசிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் 68 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர்.
சடா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலை மீது அமெரிக்கா மேற்கொண்ட வான்தாக்குதலில் 47 குடியேற்றவாசிகள் காயமடைந்துள்ளனர் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் அல் மஷிரா தெரிவித்துள்ளது.
ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்
முற்றாக தரைமட்டமாக காணப்படும் சிறைச்சாலையின் இடிபாடுகளிற்குள் பல உடல்கள் காணப்படும் படங்களை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவினை தொடர்ந்து மார்ச் 15ம் திகதி முதல் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் 800க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்த தாக்குதலில் நூற்றிற்கும் மேற்பட்ட ஹெளத்தி கிளர்ச்சியாளர்களும் அவர்களின் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்த அமெரிக்கா ஏவுகணை ஆளில்லா விமானதிட்டங்களிற்கு பொறுப்பானர்வர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டிருந்தது.
எனினும் பெருமளவு பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ஊடகம் தெரிவித்துள்ளது. சடாவில் உள்ள மத்திய சிறைச்சாலை மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை மேற்கொண்ட வேளை அங்கு 115 ஆபிரிக்க பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ஊடகம் தெரிவித்துள்ளது.