கிரீன்லாந்தை கைப்பற்ற போட்டிபோடும் அமெரிக்கா - ரஷ்யா!
கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமதம் காட்டினால், அந்தத் தீவு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்கும் சூழல் உருவாகும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் திங்கட்கிழமை (12) ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் மெத்வதேவ் தெரிவித்துள்ளதாவது,
ட்ரம்ப் விரைந்து செயல்பட வேண்டும். எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இன்னும் சில நாட்களில் அங்கு திடீர் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படலாம்.

அமெரிக்கக் கொடியில் புதிய நட்சத்திரங்கள் சேர்வதற்கு இடமிருக்காது
இதில் சுமார் 55,000 பேர் வாழ்கின்ற கிரீன்லாந்து ஒட்டுமொத்தமாக ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்க வாய்ப்புள்ளது. இது நடந்துவிட்டால் அவ்வளவுதான்.
அமெரிக்கக் கொடியில் புதிய நட்சத்திரங்கள் (புதிய மாகாணங்கள்) சேர்வதற்கு இடமிருக்காது," என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை டென்மார்க் நாட்டின் தன்னாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக உள்ளார். ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க இது அவசியம் என்பது அவர் வாதம்.
இந்நிலையில் கிரீன்லாந்து மீது தங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் இல்லை என ரஷ்யா கூறினாலும், அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளம் மற்றும் விண்வெளி கண்காணிப்பு மையங்களை ரஷ்யா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
ட்ரம்ப்பின் இந்த முயற்சிக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல' என அவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பகுதியில் பனி உருகி வருவதால், புதிய கடல் வழித்தடங்கள் மற்றும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற வல்லரசு நாடுகளிடையே போட்டி அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 2022-ல் உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த போருக்குப் பின்னர் ஆர்க்டிக் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டு, அப்பகுதி பதற்றம் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.