பகைகளை மறந்து விண்வெளியில் கைகோர்த்த அமெரிக்கா – ரஷ்யா
உலக அளவில் அரசியல் ரீதியாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பல்வேறு மோதல்களும் பதற்றங்களும் நீடித்து வரும் வேளையில், விண்வெளி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் மீண்டும் கைகோர்த்துள்ளமை சர்வதேடசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) 8 மாத கால ஆய்விற்காக, அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் அடங்கிய கூட்டுக்குழு வெற்றிகரமாகப் பயணித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்
கசகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்திலிருந்து ரஷ்யாவின் சோயுஸ் MS-29 (Soyuz MS-29) விண்கலம் மூலம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
நாசா (NASA) விண்வெளி வீரரான அனில் மேனன், ரஷ்யாவின் ரஸ்கோஸ்மோஸ் (Roscosmos) விண்வெளி முகமையின் பியோட்டர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகிய மூவர் அடங்கிய குழுவே இந்த விண்கலத்தில் பயணித்துள்ளது.
பூமியிலிருந்து ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே விண்கலம் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைந்து, விண்வெளி நிலையத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தது. இந்த மூன்று விண்வெளி வீரர்களும் அடுத்த 8 மாதங்களுக்கு விண்வெளி நிலையத்திலேயே தங்கி பல்வேறு முக்கிய அறிவியல் சோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்வின் போது நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் மற்றும் ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி பகனோவ் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர்.
உக்ரைன் விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையிலும், விண்வெளித் துறையில் இந்த ஒருங்கிணைந்த பணி தொடர்வது கவனத்தை ஈர்த்துள்ளது.
விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் காலகட்டத்தில், விண்வெளி வீரர் அனில் மேனன் உயர்தர கணினிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தேவையான குறைக்கடத்தி படிகங்களை (Semiconductor Crystals) விண்வெளியில் தயாரிப்பது குறித்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், எதிர்கால நீண்டகால விண்வெளிப் பயணங்களின் போது பூமியின் மருத்துவ உதவி இன்றி, AI தொழில்நுட்பம் மூலம் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளைச் செய்வது குறித்தும் இந்த குழுவினர் விரிவான ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.