மீண்டும் ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் ; பதிலடியில் வளைகுடா நாடுகள் அதிர்வு
ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு ஈரானின் சிரிக் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் சிதைவுகள் விழுந்ததில் சிறு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும், குவைத் மற்றும் பஹ்ரைன் பகுதிகளிலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டான் 13 ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், புதன்கிழமை அதிகாலையில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக குவைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் பதிலடி கொடுத்தால் மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இதனால் ஹார்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த சர்வதேச கவலை அதிகரித்துள்ளது.