அமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர கப்பல் விபத்து: இந்திய குழுவினரை பாராட்டிய ஜோ பைடன்!
அமெரிக்கா - மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது நேற்று அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.
இந்த விபத்தின்போது நீரில் மூழ்கிய 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலத்தின் மீது மோதிய கப்பல் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. குறித்த கப்பலில் 22 இந்தியர்களே பணியாற்றியதாக தெரியவந்துள்ளது.
குறித்த கப்பல் இலங்கையை நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது,
கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது தொடர்பில் போக்குவரத்து ஊழியர்களுக்கு கப்பல் பணியாளர்கள் முன்னரே எச்சரித்தனர்.
இதன் மூலம் பால்டிமோர் பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அதிகாரிகளுக்கு கப்பலில் பணியாற்றிய இந்தியகுழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. எனவே கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு ஜோ பைடன் கூறியுள்ளார்.