டிரம்பின் புதிய மிரட்டல்; அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர் தீவிரம்!
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
கனடாவிலிருந்து வரும் சிற்றுந்துகள், கனரக வாகனங்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான வரியை ஜனவரி 1 முதல் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வி
கடந்த வார இறுதியில் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடைசி நேரத்தில் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்ததாக பரஸ்பரம் குற்றம் சாட்டின
. ட்ரம்ப்பின் இந்த புதிய வரி அச்சுறுத்தல் தனக்கு வியப்பளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கர்னி, கனடாவின் வாகன உற்பத்தியைக் அழிக்க ட்ரம்ப் நினைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா "சரியான அணுகுமுறையுடன்" வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த கனடா தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த குறிப்பிட்ட திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இரண்டு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50வீத வரி விதிக்கும் அமெரிக்காவின் கெடுவை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று கனடா பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி இருந்தமை குரிப்பிடத்தக்கது.