அமெரிக்கா சென்ற கனேடிய யுவதியை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்; கடும் அதிருப்தி
அமெரிக்காவுக்குச் செல்லவிருந்த 20 வயதுடைய கனேடியப் யுவதி ஒருவருக்கு, அமெரிக்க சுங்க அதிகாரிகள் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாம் "சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற முயற்சிப்பதாக" சுங்க அதிகாரிகள் சந்தேகித்ததாகக் கனேடிய யுவதி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த யுவதி செல்லுபடியாகும் கனேடிய கடவுச்சீட்டு மற்றும் ஆறு வாரங்களுக்கான சுற்றுப் பயணச் சீட்டுடன் ஆர்லாண்டோவுக்குப் பயணிக்கத் தயாராக இருந்துள்ளார்.

கனேடியர்கள் மீது கடுமையான சோதனை
இருப்பினும் விமான நிலையத்தில் அமெரிக்க முன்-அனுமதி (pre-clearance) பிரிவில் ஒரு அதிகாரி குறித்த யுவதியிடம் கேள்விகேட்டபோது, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கனேடிய யுவதி அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் அமெரிக்க குடியேற்ற சட்ட நிபுணர்கள் சமீபகாலமாக கனேடியர்கள் மீது கடுமையான சோதனைகளை நடத்தி வருவதாகவும், அரசியல் சூழ்நிலைகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக அமெரிக்காவுக்குச் செல்பவர்கள் எதிர்பாராத சோதனைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், திருமண அழைப்பிதழ்கள் அல்லது நிகழ்வுக்கான டிக்கெட்டுகள், திரும்புவதற்கான விமானச் சீட்டு போன்ற அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.