கனேடிய பெண்ணை கைது செய்துள்ள அமெரிக்க அதிகாரிகள்: கணவர் கோபம்
25 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கனேடிய பெண் ஒருவரை கைது செய்து தடுப்புக்காவலில் அடைத்துள்ளார்கள் அமெரிக்க அதிகாரிகள்.
அந்தப் பெண்ணின் கணவரோ ட்ரம்ப் ஆதரவாளர். தான் ட்ரம்புக்கு வாக்களித்திருக்க, தனது மனைவியையே நாடுகடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதால் கோபமடைந்துள்ளார் அவர்.
சிந்தியா ஆலிவெராவுக்கு 10 வயது இருக்கும்போது, அவரை அமெரிக்காவுக்கு அழைத்து வந்துள்ளார்கள் அவரது பெற்றோர், சட்டவிரோதமாக!
25 ஆண்டுகளாக அமெரிக்காவில் வரி செலுத்தி அமெரிக்க குடிமக்களான தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் சிந்தியாவுக்கு, 2024ஆம் ஆண்டில், அமெரிக்காவில் சட்டப்படி வாழ அனுமதியளித்திருந்தார் முந்தைய அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன்.
இதற்கிடையில், ஏற்கனவே, கிரீன் கார்டுக்காக, அதாவது, சட்டப்படி நிரந்தர குடியிருப்பு அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தார் சிந்தியா.
இந்நிலையில், கிரீன் கார்டு தொடர்பான நேர்காணலுக்காக ஜூன் மாதம் 13ஆம் திகதி கலிபோர்னியாவுக்குச் சென்றிருந்தார் சிந்தியா.
நடந்தது என்னவென்றால், நேர்காணலுக்குச் சென்ற சிந்தியாவை புலம்பெயர்தல் அதிகாரிகள் பிடித்து தடுப்புக்காவலில் அடைத்துவிட்டார்கள்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடுகடத்தும் ட்ரம்பின் நடவடிக்கைகளின் கீழ், சிந்தியாவை நாடுகடத்துவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
தானும் தன் கணவரும் கனடாவுக்குச் செல்ல விமான டிக்கெட்டுக்கான பணம் செலுத்தவும் தயார் என்று கூறியுள்ள நிலையிலும், அதிகாரிகள் தரப்பிலிருந்து அவருக்கு எந்த பதிலும் இல்லை.
தான் ட்ரம்புக்கு வாக்களித்தும், தன் மனைவியை நாடுகடத்த ட்ரம்ப் நிர்வாகம் முயன்றுவருவதால் கோபமடைந்துள்ள சிந்தியாவின் கணவரான ஃப்ரான்சிஸ்கோ ஆலிவெரா, தான் ட்ரம்புக்கு அளித்த வாக்கைத் திருப்பித் தரவேண்டும் என்கிறார்.