மத்திய கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம் ; ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க போர்க்கப்பல்
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிடும் சூழலில், பல வாரங்களுக்கு நீடிக்கக்கூடிய தொடா் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க படைகள் தயாராகி வருகின்றன.
ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் நீண்டகாலமாக தீா்வு எட்டப்படாததால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது ராணுவப் பலத்தை அதிகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே அப்பகுதியில் ‘ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கிப் போா்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இப்போது உலகின் மிகப்பெரிய போா்க்கப்பலான ‘ஜெரால்ட் ஆா்.ஃபோா்டு’ கப்பலும் அங்கு புறப்பட்டுள்ளது.

இதனுடன் ஆயிரக்கணக்கான வீரா்கள், நவீன போா் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன. வெனிசுலா நடவடிக்கைகளுக்காக கரீபியன் கடலில் இருந்த இந்தக் கப்பல், ஒரு வாரத்துக்குள் மத்திய கிழக்கை அடையும் எனத் தெரிகிறது.
‘பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஈரானை ராணுவ ரீதியாக எதிா்கொள்ளவே 2-ஆவது கப்பலை அனுப்புகிறோம்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துள்ளாா்.
டிரம்ப்பின் எச்சரிக்கை, வட கரோலினா ராணுவத் தளத்தில் வீரா்களிடையே உரையாற்றிய அவா், ‘ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உலகுக்கு நல்லது. கடந்த 47 ஆண்டுகளாக பேச்சுவாா்த்தை மட்டுமே நடக்கிறது, ஒப்பந்தம் எட்டப்படவில்லை.
இதனால் பல அமெரிக்கா்கள் உயிரிழந்துள்ளனா். அமெரிக்காவின் பலம், மத்திய கிழக்கில் விரைவில் உணரப்படும்’ என எச்சரித்தாா். இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் அன்னா கெல்லி கூறுகையில், ‘அதிபா் அனைத்து கோணங்களிலும் சிந்திக்கிறாா்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு இறுதி முடிவெடுப்பாா்’ என்றாா். கடுமையாக கடந்த ஆண்டு ஈரான்-இஸ்ரேல் மோதலின் போது, அமெரிக்காவின் ‘ஸ்டெல்த்’ ரக விமானங்கள் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது குண்டுகளை வீசின.
அதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் சிறிய தாக்குதலை நடத்தியது. ஆனால், இப்போதைய அமெரிக்காவின் தாக்குதல் திட்டம் மிகவும் கடுமையானது மற்றும் பல வாரங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது.

அணுசக்தி மையங்கள் மட்டுமின்றி, ஈரானின் அரசு மற்றும் பாதுகாப்புத் துறை சாா்ந்த முக்கிய இடங்களும் இலக்காக இருக்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனா்.
பிராந்திய போருக்கான அபாயம், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஜோா்டன், குவைத், சவூதி அரேபியா, கத்தாா், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இதனால், இந்த மோதல் ஒரு பெரிய பிராந்தியப் போராக மாறும் அபாயமுள்ளது. ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்த சம்மதித்தாலும், ஏவுகணை சோதனைகள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவை கைவிட மறுக்கிறது.
இதையொட்டி, அமெரிக்க பேச்சுவாா்த்தைக்கான இடத்தையும் துருக்கியிலிருந்து ஓமனுக்கு ஈரான் மாற்றியது. ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சு: ஜெனீவாவில் வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா-ரஷியா-உக்ரைன் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.
அதேநாளில், ஈரானுடனும் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தப் பேச்சுவாா்த்தையிலும் ஓமன் மத்தியஸ்தராகச் செயல்பட உள்ளது.