அமெரிக்கா - ஈரான் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியம்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தது.
இதன் விளைவாக, ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையை அறிவித்ததால் போர் பதற்றம் அதிகரித்தது.

எனினும், தூதரக ரீதியிலான முயற்சிகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளதாகவும், இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இந்த வார இறுதியில் மீண்டும் இஸ்லாமாபாத் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல் சர்வதேச சந்தையில் நிலவிய பதற்றத்தைச் சற்று தணித்ததோடு, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரை விடவும் குறைவதற்கு ஏதுவாகியுள்ளது.
ஈரான் தரப்பு தங்களைத் தொடர்புகொண்டு ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டியதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை உறுதி செய்யும் எந்தவொரு திட்டத்தையும் தாம் ஏற்கப்போவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.