அமெரிக்கா - ஈரான் பதற்றம் ; பாகிஸ்தானுக்கு சீனா விடுத்த முக்கிய கோரிக்கை
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றநிலையை தணிக்கும் நோக்கில் முன்னதாக பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட போர்நிறுத்த மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ஈரானிய துறைமுகங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதிகளை அமெரிக்க படைகள் தொடர்ந்து முற்றுகையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர், உலக எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தியதால், பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உரையாடலின் போது, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்க அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என வாங் யீ வலியுறுத்தியதுடன், அதற்கான பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு சீனா முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அரசு முறைப் பயணமாக சீனாவிற்கு செல்லவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.