கீழே விழுந்து நொருங்கிய அமெரிக்க இராணுவ விமானம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இராணுவ விமானம் கீழே விழுந்து நொருங்கியது. தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிளாமிஸ் பகுதி அருகே பறந்து சென்ற இராணுவ விமானம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொருங்கியது.
மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானம் மெக்சிகோ எல்லையில் 35 கிலோமீற்றர் தூரத்தில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
இது குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
கடற்படைக்குச் சொந்தமான ஒரு விமானம் கிளாமிஸ் பகுதியில் விபத்தில் சிக்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் முதலில் தகவல் தெரிவித்தனர்.
விமானத்தில் அணுசக்தி பொருட்கள் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்திகள் எனவும் அவர் கூறினார்.
எனினும் விமான விபத்தில் உயிரிழப்பு, சேதம் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
அதேவேளை கடந்த மாதம் நோர்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.