மீண்டும் கசிந்த அமெரிக்க இராணுவ இரகசியம் ; பாதுகாப்புச் செயலாளர் மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவின் மிகவும் இரகசியமான போர்தந்திரோபாயங்களை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட்டே ஹெக்செத் சமூக ஊடக குழு உரையாடலில் பகிர்ந்துகொண்டார் என மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனையடுத்து அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இராணுவ ரகசியங்கள்
கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க இராணுவம் திட்டம் தீட்டியிருந்தது. இத்திட்டத்தை சமூக ஊடக குழு உரையாடலில் பகிர்ந்து கொண்டார் என இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போதும் அதே குற்றத்தை பாதுகாப்பு செயலாளர் பீட்டே ஹெக்செத் மீண்டும் செய்துள்ளார் என அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பீட் ஹெக்செத் இந்த இராணுவ ரகசியங்களை 'Defense Team Huddle' என பெயரிடப்பட்ட மற்றொரு குழுவிலும் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த குழுவில் மொத்தம் 13 பேர் இருந்திருக்கின்றனர். இதில் ஹெக்செத்தின் மனைவியும் உறவினர்களும் இருந்திருக்கின்றனர். பீட் ஹெக்செத் பகிர்ந்த தகவல்கள் உயர்மட்ட இராணுவ இரகசியமாகும்.
F/A-18 ஹார்னெட் விமானம் எந்த நேரத்தில் புறப்படும் என்பது உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் இவர் பகிர்ந்துள்ளார் என கூறப்படுகிறது. இதேவேளை வெள்ளை மாளிகை இதனை போலி குற்றச்சாட்டு என்று மறுத்திருக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை பேசுபொருளாகியுள்ளமையால் பதவியிலிருந்து ஹெக்செத்தை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி குரல் எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.