US Open இறுதிப் போட்டி; டிரம்ப் வருகையால் கூச்சல் குழப்பம்!
நியூயார்க் நகரில் டென்னிஸ் உலகின் நட்சத்திரங்களான ஜானிக் சின்னர் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் இடையிலான US Open இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய நிலையில் டிரம்ப் இன் வருகையால் சலசலப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் திடீர் வருகை ஃபிளஷிங் மெடோஸில் பெரும் பாதுகாப்பு குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான உணர்வுகளைத் தூண்டியது.
தணிக்கை உத்தரவு
ரோலக்ஸ் நிறுவனத்தின் விருந்தினராக வந்த 79 வயதான ட்ரம்ப், தனது தனிப்பட்ட அறையில் இருந்து ஆர்தர் ஆஷே மைதானத்திற்குள் நுழைந்தபோது, வழக்கமான புன்னகையுடன் காணப்பட்டார்.
அவரைச் சுற்றி, அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி மற்றும் ஜாரெட் குஷ்னர் உட்பட ஒரு பெரிய குழு அணிவகுத்து வந்தது. அவர் அரங்கிற்குள் வந்ததும், ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரும் ஆரவாரமும், எதிர்ப்புக் குரல்களும் ஒரே நேரத்தில் ஒலித்தது.
இந்த எதிர்பாராத நிகழ்வு காரணமாக, போட்டி 2 மணியிலிருந்து 2:30 மணி வரை தாமதமானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமெரிக்க டென்னிஸ் சங்கம் (USTA), ESPN மற்றும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் போன்ற ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு அவசரமாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியது.
அதில், ட்ரம்பின் வருகைக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அல்லது எதிர்வினைகளையும் ஒளிபரப்பாளர்கள் தணிக்கை செய்ய வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்தத் தணிக்கை உத்தரவு, ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டி இது.
சின்னர் மற்றும் அல்காரஸ் இருவரும் மீண்டும் ஒருமுறை பலப்பரீட்சை செய்ய இருந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம், ட்ரம்பின் வருகையால் அரசியல் நாடகமாக மாறியது. பாதுகாப்பு நடவடிக்கைகளும், ட்ரம்பின் ஆதரவு குழுவினரும் ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக, ஆட்டத்தின் கவனம் திசை திரும்பியது.
போட்டி முடிவுகள் ஒருபுறம் இருந்தாலும், முதல் பந்து வீசுவதற்கு முன் நடந்த இந்தச் சம்பவம், டென்னிஸ் உலகையும் அரசியல் உலகையும் ஒரே இடத்தில் மோதவிட்டு, பரபரப்பான ஒரு தருணத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமான ஒரு விளையாட்டு நிகழ்வு, ஒரு அரசியல் பிரமுகரின் வருகையால் எந்த அளவுக்கு ஸ்தம்பிக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என அவதானிகள் கூறியுள்ளனர்.