சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் மீது அமெரிக்கா அதிரடி
சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) அமைப்பினர் மீது அமெரிக்கப் படைகள் நேற்று மீண்டும் ஒருமுறை பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இது அமைந்துள்ளது.
கடந்த மாதம் சிரியாவின் பல்மைரா (Palmyra) பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அமெரிக்காவை சேரந்த இரு படையினர், அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் அயாத் மன்சூர் சகாத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த பதிலடி தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்க நிர்வாகம் 'ஒபரேஷன் ஹொக்கீ ஸ்டிரைக்' எனப் பெயரிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சிரியா முழுவதும் பரவியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பல முக்கிய நிலைகள் தகர்க்கப்பட்டன.
இந்தப் பாரிய தாக்குதலில் அமெரிக்கப் படைகளுடன் நட்பு நாடுகளின் படைகளும் இணைந்து செயல்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் வீரர்களுக்கு நீங்கள் தீங்கு விளைவித்தால், உலகின் எந்த மூலையில் நீங்கள் ஒளிந்திருந்தாலும் உங்களைக் கண்டுபிடித்து அழிப்போம்.
நீதியிலிருந்து உங்களால் தப்ப முடியாது என்பதே எங்களது வலுவான செய்தி" என்று எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், இந்த அமெரிக்கத் தாக்குதலுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக, சிரியப் பாதுகாப்புப் படையினர் ஐஎஸ் அமைப்பின் முக்கிய இராணுவத் தலைவரைக் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.