ட்ரம்பின் வரி விதிப்பால் கனடாவில் 500,000 பேர் வேலையிழக்கும் அபாயம்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கனடா மீது 25 சதவிகிதம் வரி விதிக்க இருப்பதாக எச்சரித்துள்ளார்.
அப்படி அவர் 25 சதவிகித வரி விதிக்கும் நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டுமே, 500,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக மாகாண பிரீமியர் தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் 25 சதவிகித வரி விதிப்பாரானால், அது பல்வேறு துறைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford.
ட்ரம்பின் வரி விதிப்பால், பல துறைகளில், துறைகளைப் பொருத்து ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார் Ford.
என்றாலும், தோராயமாக 450,000 பேர் முதல் 500,000 பேர் வரை வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக சம்பந்தப்பட்ட துறையினர் கூறுவதாக தெரிவித்துள்ளார் Ford.
ஆகவே, ட்ரம்பின் வரி விதிப்பை எதிர்கொள்வதற்காக கனேடிய மாகாணங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து திட்டமிடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பில் ஆலோசனை செய்வதற்காக, இன்று, புதன்கிழமை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் 13 மாகாணங்களின் பிரீமியர்களும் சந்திக்க இருக்கிறார்கள்.