கனடா உள்ளிட்ட 5 வெளிநாட்டு துணைத் தூதரகங்களை மூடத் திட்டமிடும் நாடு
உலக அளவில் தனது ராஜதந்திர இருப்பைச் சுருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐந்து வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்களை மூடத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட எந்தவொரு புவிசார் அரசியல் நெருக்கடியும் இல்லாத சூழலில், அமெரிக்கா ஒரே நேரத்தில் பல வெளிநாட்டு தூதரக அலுவலகங்களை மூடுவது அரிதான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பின்படி, கிரெனடாவின் செயிண்ட் ஜார்ஜஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம், ஜப்பானின் நகோயா, இந்தோனேசியாவின் மேடான், கனடாவின் வின்னிபெக் ஆகிய இடங்களில் உள்ள துணைத் தூதரகங்கள் மற்றும் கேமரூனின் டுவாலாவில் உள்ள தூதரகக் கிளை அலுவலகம் ஆகியவை மூடப்படவுள்ளன.

அதிபர் டொனால்ட் டிரம்பின் "அமெரிக்காவிற்கே முதலிடம்" என்ற கொள்கைக்கு ஏற்ப, அமெரிக்க அரசு இயந்திரத்தை மாற்றி அமைக்கும் முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செலவுகளைக் குறைக்கும் பொருட்டுச் சிறிய அளவிலான தூதரக அலுவலகங்களை மூடுவது அவசியமானது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைத்து, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிவிடும் என ஜனநாயகக் கட்சியினரும் முன்னாள் வெளியுறவுக் கொள்கை அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து நேரடியாக உறுதிப்படுத்தாத அமெரிக்க வெளியுறவுத் துறை, நாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகள் திறம்படவும், குறைந்த செலவிலும் செயல்படுவதை உறுதி செய்வதிலேயே தாங்கள் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
மூடப்பட திட்டமிடப்பட்டுள்ள நகோயா, மேடான் மற்றும் செயிண்ட் ஜார்ஜஸ் ஆகிய இடங்களில் சீனா ஏற்கனவே தனது ராஜதந்திர அலுவலகங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.