அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா
அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ள நிலையில், சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ஆதரவாகச் செயல்பட முன்வந்துள்ளன.
பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலே பேச்சுவார்த்தைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனச் சிரேஷ்ட சீன மற்றும் ரஷ்ய ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தவிர, பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள் நீக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது ஈரானுக்கு எதிரான சர்வதேச தடைகளை நீக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்த ஒப்புதலை அளித்திருந்தது.
ஆனால் 2018 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதியாக தமது முதலாவது பதவிக் காலத்தைப் பொறுப்பேற்று ஒரு வருடத்தில் டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், தற்போது அணுசக்தியினை அமைதியான முறையில், நன்மையான திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கான ஈரானின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனச் சீனாவும் ரஷ்யாவும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.