வோகான் பூங்காவில் தகாத செயலில் ஈடுபட்ட ஊழியர் கைது
கனடாவின் வோகான் பகுதியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ் சவாரி இயங்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
யார்க் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மே 25 அன்று சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் பெயர் குறிப்பிடப்படாத பொழுதுபோக்கு பூங்காவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு அவர் சவாரி ஒன்றில் ஏற முயன்றபோது, பாதுகாப்புப் பரிசோதனைகளைச் செய்வதாகக் கூறி, அங்கிருந்த ஊழியர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த ஜுகாத் தாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இவரிடம் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதும் பொலிஸார், பொதுமக்கள் அடையாளம் காணும் பொருட்டு சந்தேகநபரான தாமியின் புகைப்படத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
இந்த விசாரணை தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், யார்க் பிராந்திய பொலிஸின் சிறப்புப் பிரிவை 1-866-876-5423 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது Crime Stoppers அமைப்பையோ அநாமதேயமாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.