செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுத் துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக ஸ்கார்பரோ–ரூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமது நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டமை தமக்கு மிகுந்த பணிவையும் பெருமையையும் அளிப்பதாக விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒன்ராறியோ அரசாங்கத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான நம்பிக்கையை வழங்கிய பிரதமர் டக் ஃபோர்டுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய பொறுப்பில், பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வர்த்தக அமைச்சராக உள்ள விக்டர் ஃபெடெலியுடன் இணைந்து பிரதமர் டக் ஃபோர்டின் தலைமையில் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒன்ராறியோ செயற்கை நுண்ணறிவின் பிறப்பிடமாகும்” எனக் குறிப்பிட்ட விஜய் தணிகாசலம், செயற்கை நுண்ணறிவுத் துறையில் மாகாணத்திற்குள் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிலிருந்து ஒன்ராறியோவைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்துடன் இணைந்து, மாகாணத்திற்குள் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பொருளாதார வாய்ப்புகளை மேலும் வளர்ப்பதே தமது நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஒன்ராறியோவை கனடாவின் செயற்கை நுண்ணறிவு தலைநகராக உருவாக்குவோம்” என விஜய் தணிகாசலம் தனது பதிவில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜய் தணிகாசலம் தற்போது ஸ்கார்பரோ–ரூஜ் பார்க் ( Scarborough–Rouge Park) தொகுதியின் மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், ஒன்ராறியோவின் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராகவும் செயற்படவுள்ளார்.