வேலைக்கு சேர்ந்த பதினோரு வருடத்தில் சி.இ.ஓ ஆன சுந்தர் பிச்சை; கூகுள் தமிழனின் விஸ்வரூப வளர்ச்சி
வேலைக்கு சேர்ந்த பதினோரு வருடத்தில் சி.இ.ஓ ஆன சுந்தர் பிச்சை எனும் தமிழனின் வரலாற்றினை அறியாதவர்கள் இல்லை எனலாம். தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த கூகுள் தமிழனின் இந்த அசுர வளர்ச்சி, எப்படி இது அவரால் சாத்தியமானது என்பது பற்றி அறிந்துகொள்வோம்.
இணைய வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. எதிர்வரவிருக்கும் காலங்களில் இணையமே உலகின் இயங்கியலைத் தீர்மானிக்கக்கூடிய காரணியாக இருக்கும் என்பதை உணர்ந்த பல நிறுவனங்கள் இத்துறைக்குள் கால் பதிக்கத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருந்தன. ஏற்கனவே இருந்த இத்துறைசார் நிறுவனங்கள், தங்களது வேர்களை ஆழப்பதிப்பதற்கான முயற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தன.
லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரால் தொடங்கப்பட்டு ஆறு வயதே எட்டிய ‘கூகிள்’ என்ற நிறுவனத்தில், அந்தக் காலகட்டத்தில் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழர் பணிக்குச் சேர்கிறார். நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்குபவர்களில், தொழில்நுட்ப அறிவு நிரம்பிய அந்த நபர் வழங்கும் ஆலோசனைகள் கவனிக்கத்தக்கவை.
அந்த வகையில், ஒரு முறை, ‘நம் நிறுவனத்திற்கென்று தனியாக ஒரு தேடுபொறி (BROWSER) வேண்டும்’ என ஒரு ஆலோசனையை முன்வைக்கிறார்.
அதே காலகட்டத்தில் இணைய உலகில் முன்னணி நிறுவனமாக இருந்த ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்திடம் ‘இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்’ எனத் தனியாக ஒரு தேடுபொறி இருந்தது.