ட்ரூடோ பதவி விலகினால்தான் கட்சி முன்னேறும்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ட்ரூடோ பதவி விலகினால்தான் கட்சி முன்னேறும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கனடாவில், கியூபெக் மாகாணத்தில், நீண்ட காலமாக லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அலெக்சாண்ட்ரா (MP Alexandra Mendes).
ட்ரூடோ பதவி விலகவேண்டும் என ஏராளமான மக்கள் தன்னிடம் கூறிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
என் தொகுதி மக்கள், லிபரல் கட்சியை அடுத்த தேர்தலுக்குள் வழிநடத்தும் தலைவராக ட்ரூடோவைப் பார்க்கவில்லை என்கிறார் அலெக்சாண்ட்ரா.
ஒன்பது ஆண்டுகளாக ஆட்சி செய்த ட்ரூடோ எதை சாதித்தார் என்பது தங்களுக்குத் தெரியவில்லை என கனேடிய மக்கள் கூறுவதாக தெரிவிக்கிறார் அவர்.
கட்சி அல்ல, கட்சியின் தலைமைதான் பிரச்சினைக்குக் காரணம் என்று கூறும் அலெக்சாண்ட்ரா, ட்ரூடோ பதவி விலகினால்தான் கட்சி முன்னேறும் என்கிறார்.
கனடா பிரதமரும், லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகவேண்டும் என வெளிப்படையாக கருத்து தெரிவித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அலெக்சாண்ட்ராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.