ஈரான் மக்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம் ; அமெரிக்க துணை ஜனாதிபதி
தங்களின் உரிமைகளுக்காக போராடும் ஈரான் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்கிறோம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானில் நிலவும் பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், கமேனி தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
தலைநகா் டெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன. நாடு முழுவதும் இணைய சேவையும், தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஈரானில் அமைதியாக போராடும் மக்களை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா அவர்களுக்கு துணையாக களத்தில் இறங்கும் என்று கடந்த வாரம் ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த கமேனி, ஈரான் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்றார்
இதனிடையே ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”ஈரான் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை கண்டிக்கிறோம். இத்தகைய நிலைபாடு ஈரான் மக்கள் மீதான அக்கறையில் எடுக்கப்படவில்லை.
வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டி, ஈரானில் அமைதியின்மையையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்கும் நோக்கம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய ஜே.டி.வான்ஸ், “தங்களின் உரிமைகளுக்காக அமைதியான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கும், சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கும் நாங்கள் துணையாக நிற்போம். ஈரான் ஆட்சிக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன.
அணுசக்தித் திட்டம் தொடர்பாக உண்மையான பேச்சுவார்த்தையை அமெரிக்காவுடன் நடத்த வேண்டும். எதிர்காலத்தில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி அதிபரே தெரிவிப்பார்.
ஆனால், ஈரான் உள்பட உலகம் மூழுவதும் உரிமைகளுக்காக போராடும் எவருடனும் அமெரிக்கா துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.