துயரமாக மாறிய திருமணக் கொண்டாட்டம் ; எரிவாயு வெடித்து மணமக்கள் உட்பட எட்டு பேர் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த எரிவாயு கொள்கலன் வெடிப்புச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து உறவினர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், இன்று அதிகாலை எரிவாயு கொள்கலன் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் மணமக்கள் உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமணக் கொண்டாட்டங்களுக்காகத் திரண்டிருந்த விருந்தினர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
வெடிப்பின் வீரியத்தால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழ்ந்தது.
இந்த விபத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இந்த விபத்து நடந்ததாக இஸ்லாமாபாத் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.