பாலியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட திமிங்கலம்
பாலியில் உள்ள மக்கள் இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக, ஒரு திமிங்கலத்தின் சடலத்தைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மற்றொரு பிரம்மாண்ட திமிங்கலத்தின் உடல் பாலி கடற்கரையின் கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்தில் இது போன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும். அதிகாரிகளின் கூற்றுப்படி சமீபத்திய திமிங்கிலம் 56 அடி நீளம் (அல்லது 17 மீட்டர் நீளம்) எண்ணெய்த் திமிங்கலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு பாலியின் ஜெம்ப்ரானா மாவட்டத்தில் உள்ள யே லே கடற்கரையில் இது சனிக்கிழமை பிற்பகல் கரை ஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்புக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் உள்ளூர் கடல் மற்றும் மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் AFP இடம் பேசுகையில், "சில நாட்களுக்கு முன்பு கரை ஒதுங்கிய திமிங்கிலம் போல" இந்த திமிங்கிலமும் நோயால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை தெரிவித்துள்ளார்.
உள்ளூர் கடல் மற்றும் மீன்வளத்துறை அதிகாரி பெர்மனா யுடியார்சோ கூறுகையில் உடல் வழக்கத்தை விட ஒல்லியாகவும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தது போலும் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது பிரேத பரிசோதனையை எளிதாக்கும் வகையில் சடலத்தை கரைக்கு இழுக்க முயற்சித்து வருகிறோம் சோதனை முடிந்ததும் புதைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
எண்ணெய்த் திமிங்கிலங்கள் உலகெங்கிலும் காணக்கூடிய மிதவைப் பாலூட்டிகள். இவை இரைதேடியும், இனப்பெருக்கத்துக்காகவும் காலநிலைக்கேற்ப இடம் விட்டு இடம் செல்பவை.
பெண் திமிங்கிலங்களும் இளம் ஆண் திமிங்கிலங்களும் கூட்டமாக வாழும். வயது வந்த ஆண் திமிங்கிலங்கள் பெரும்பாலும் தனித்து வாழும்.
இனப்பெருக்க காலங்களில் மட்டுமே பெண் திமிங்கிலங்களை நாடும். நான்கு முதல் இருபது ஆண்டுகள் வரையிலான இடைவெளியில் பெண் திமிங்கிலங்கள் குட்டிகளை ஈனுகின்றன.
பத்து ஆண்டுகள்வரை தமது குட்டிகளை வளர்க்கின்றன. விந்து திமிங்கலம் எனவும் இது அழைக்கப்படுகிறது. இதன் தலையில் உள்ள ஒரு உறுப்பு ஸ்பெர்மாசெட்டி என்று அழைக்கப்படுகிறது. இதில் எண்ணெய் நிரப்பப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.