கனடிய விமானப் பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல்
சாதாரண விமானப் பயணம் ஒன்று திடீரெனப் பயங்கரக் கனவாக மாறினால் என்ன நடக்கும்? விமான நிலைய ஊழியர்களால் உங்கள் பயணப் பொதி தொலைந்து போவதுதான் மிக மோசமான விடயம் என நீங்கள் நினைத்தால், அது தவறு. பயணிகளின் பெயரில் போதைப்பொருட்களைக் கடத்தும் பாரிய மோசடி ஒன்றினால், அப்பாவிப் பயணிகள் வெளிநாட்டுச் சிறைகளில் தள்ளப்படும் அதிர்ச்சித் தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஊழல் நிறைந்த விமான நிலைய ஊழியர்கள், அப்பாவிப் பயணிகளின் பயணப் பொதிகளில் ஒட்டப்பட்டுள்ள அடையாளத் துண்டை அகற்றி, அதனைப் போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேறொரு சூட்கேஸில் ஒட்டிவிடுகின்றனர்.
இதனால், போதைப்பொருள் அடங்கிய பொதி அப்பாவிப் பயணியின் பெயரில் எந்தச் சந்தேகமுமின்றி கண்டம் விட்டுக் கண்டம் பயணிக்கிறது. இவ்வாறான 24-க்கும் மேற்பட்ட சம்பவங்களை அடையாளம் கணப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் சிக்கிய கனடியப் பயணிகள் பலர், "அது என்னுடைய பை அல்ல" என்ற வாதத்தைக் காதுகொடுத்துக் கேட்காத வெளிநாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுச் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் புதிய சட்டங்களை உருவாக்க முயற்சித்து வரும் நிலையில், சட்டங்களை விட மிக எளிமையானதும் மலிவானதுமான ஒரு தொழில்நுட்பத் தீர்வு தன்னிடம் உள்ளதாக மொன்றியலைச் சேர்ந்த பில் ட்ரோரி என்பவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தடயப் பொருட்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் 'டேம்பர்கார்ட்' நிறுவனத்தை நடத்தி வரும் ட்ரோரி, 10 ஆண்டுகளுக்கு முன்னரே 'மாற்ற முடியாத பயணப் பொதித் ஒன்றை உருவாக்கியுள்ளார். சாதாரண பொதித் துண்டுகளைப் பலமுறை கழற்றி மீண்டும் ஒட்ட முடியும்.
ஆனால், ட்ரோரியின் இந்தப் புதிய பொதித் துண்டை ஒருமுறை கழற்றினாலே அதில் செல்லுபடியற்றது என்ற வாசகம் தோன்றுவதுடன், அதன் பசையும் முற்றாக நீங்கிவிடும். இதனால் அதனை மீண்டும் வேறொரு பையில் ஒட்டவே முடியாது.