அமெரிக்கக் குடியேற்றக் கொள்கைகளினால் பாதிக்கப்படும் கனடா
அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேரை நாடுகடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, சில குடியேறிகளுக்கான பாதுகாப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட உள்ளன.
இதனால், அமெரிக்காவில் இருக்கும் அகதிகள் தங்களின் பாதுகாப்பிற்காக வடக்கு எல்லையைக் கடந்து கனடாவிற்குள் நுழைய முயலலாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
எனினும், அமெரிக்கா மற்றும் கனடா இடையே உள்ள 'பாதுகாப்பான மூன்றாவது நாடு ஒப்பந்தத்தின்' படி, அமெரிக்காவில் இருந்து எல்லை வழியாக கனடாவுக்குள் நுழையும் அகதிகள் திருப்பி அனுப்பப்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஒப்பந்தத்தின்படி, தஞ்சம் கோருபவர்கள் தாங்கள் முதலில் கால்பதிக்கும் பாதுகாப்பான நாட்டில்தான் அகதி அந்தஸ்து கோர வேண்டும். குறிப்பிட்ட சில விதிவிலக்குகளைத் தவிர, மற்றவர்கள் எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுவர்.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள குடியேற்ற விவகாரங்களுக்கான வழக்கறிஞர் ஜோயல் சாண்டலக், கனடாவிற்குள் மீண்டும் ஒரு பெரிய அகதிகள் அலை வரும் என்று தான் கருதவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து தினசரி 165 பேர் கனடாவுக்கு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 15 ஆகக் குறைந்துள்ளது என்றார்.
மேலும், கனடா சமீபத்தில் நிறைவேற்றியுள்ள மசோதா சி-12, அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கான அகதி பாதுகாப்பை பெருமளவில் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
கியூபெக் மற்றும் நியூயார்க் இடையே உள்ள 'ராக்ஸாம் சாலை' போன்ற முறைசாரா எல்லைக் கடப்பு வழிகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.
தற்போதைய சூழலில், அமெரிக்காவின் கடுமையான கொள்கைகளால் எல்லையில் தஞ்சம் கோர முடியாமல் போகும் அகதிகள், சட்டவிரோதமாக மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று சாண்டலக் கவலை தெரிவித்துள்ளார்.
"பாதிக்கப்படுபவர்களில் குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இத்தகைய பெரிய அரசியல் கொள்கைகள், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் துயரங்களையும் கருத்தில் கொள்வதில்லை," என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.