கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 6,600 தங்கக்கட்டிகள் தொடர்பில் பொலிசார் கூறும் தகவல்
கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 400 கிலோ தங்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கோ அல்லது தெற்காசிய நாடுகளுக்கோ கடத்தப்பட்டிருக்கலாம் என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
சிறிது நேரத்தில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு சுமார் 20 மில்லியன் டொலர்கள். அத்துடன், மற்றொரு பார்சலில் 2 மில்லியன் டொலர்கள் கரன்சியும் இருந்துள்ளது.
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர்கள் மோசடியாளர்கள் என்பதும் அவர்கள் அந்த தங்கக்கட்டிகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள் என்பதும்.
திரைப்படக் காட்சிகள் போல் நடந்த இந்த சம்பவம் நடந்து சுமார் 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இதுவரை அந்த தங்கம் என்ன ஆனது என யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட அந்த தங்கம், உடனடியாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கோ அல்லது தெற்காசிய நாடுகளுக்கோ கடத்தப்பட்டிருக்கலாம் என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், கொளையடிக்கப்பட்ட அந்த 6,600 தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் 20 மில்லியன் டொலர்கள். ஆனால், அந்த வழக்கு விசாரணைக்காக இதுவரை செலவிடப்படுள்ள தொகை மட்டுமே 5.3 மில்லியன் டொலர்கள்!
என்றாலும், இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் என்ன ஆனது என்பது குறித்த சரியான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.