மாடர்னா அல்லது ஃபைஸர்... கனேடியர்கள் எந்த பூஸ்டர் தடுப்பூசி எடுக்க வேண்டும்?
கனடாவில் புதிய ஓமிக்ரான் மாறுபாடு பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தடுப்பூசி பெறுவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளனர்.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெறுவதற்கான தகுதியை சமீபத்தில் விரிவுபடுத்தியுள்ளனர். இதனால், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் ஜனவரி 4 முதல் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பதிவு செய்ய முடியும்.
கனடாவில் புதிய ஓமிக்ரான் மாறுபாடு பரவல் அதிகரித்துள்ள நிலையிலேயே மாகாண நிர்வாகங்கள் துரித நடவடிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெறுவதற்கான தகுதியை விரிவுபடுத்தி வருகின்றனர்.
ஆனால் புதிய சிக்கலாக, அதிகமான கனேடியர்கள் எந்த வகையான பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவது என்று யோசித்து குழம்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கனடாவில் ஃபைஸர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் mRNA தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களுக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது. மேலும், இந்த இந்த இரண்டு தடுப்பூசிகளில் எதைப் போட்டுக்கொண்டாலும், பலன் ஒன்று தான் என குறிப்பிடுகின்றனர்.
மட்டுமின்றி, இரண்டு டோஸ் ஃபைஸர் போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக மாடர்னா போட்டுக்கொண்டாலும் தவறில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபைஸர் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியானது ஒருவருக்கு 30 மைக்ரோகிராம்கள் செலுத்தப்படுகிறது.
ஆனால் மாடர்னா நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசியானது 50 மைக்ரோகிராம்கள் என தெரியவந்துள்ளது. மேலும், 18 முதல் 29 வயதுடைய கனேடியர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைஸர் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஃபைஸர் அல்லது மாடர்னா நிறுவனத் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். மட்டுமின்றி, ஆஸ்ட்ராசெனகா அல்லது ஜோன்சன் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசியாக மாடர்னா அல்லது ஃபைஸர் போட்டுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாடர்னா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக மாடர்னா போட்டுக்கொள்வதுதான் சரியான முடிவாக இருக்கும் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.