பதவியேற்ற 5 நாட்களில் பதவி விலகும் வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர்!
அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளராகப் பதவியேற்ற கேட்டி ஸக்காரியா (Katie Zacharia), ஐந்து நாட்களிலேயே அப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேட்டி ஸக்காரியா (Katie Zacharia), அவரது முதல் வாரத்திலேயே பணித்திறன் தொடர்பான விமர்சனங்களும், தொழில்சார் தகுதிகள் குறித்த கேள்விகளும் எழுந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மறுபரிசீலனை செய்யுமாறு ட்ரம்ப் ஆலோசனை
கேட்டி ஸக்காரியா (Katie Zacharia) பதவியிலிருந்து விலகுவதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளராக அவர் (Katie Zacharia) பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, கரோலின் லீவிட்டுக்குப் பதிலாக இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட கேட்டி ஸக்காரியா, ஒக்டோபர் 13ஆம் திகதி நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு சுமார் 14 நிமிடங்கள் மட்டுமே நீடித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது செயல்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவர் முன்னதாகச் சட்டத்தரணியாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சட்டத்தரணிகளுக்கான தகுதிகாண் பரீட்சையில் சித்தியடையவில்லை என ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது தொழில்சார் தகுதிகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஊடகங்கள் , கேட்டி ஸக்காரியாவை நியாயமற்ற முறையில் நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர் அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு தாம் ஆலோசனை வழங்கியதாகவும் ட்ரம்ப், தெரிவித்துள்ளார்.