கடும் நிதி பற்றாக்குறை; 70 நாடுகளில் உலக சுகாதார நிறுவன பணி முடங்கும் அபாயம்
நிதி பற்றாக்குறை காரணமாக, 70 நாடுகளின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பாகும். இது உலகெங்கிலும் உள்ள பொது சுகாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும், சர்வதேச அளவில் சுகாதார நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கவும், பொது சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கவும் செயல்படுகிறது.
நிதிப் பற்றாக்குறை
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த அமைப்புக்கு நிதிப் பிரச்சினை பெரிய அளவில் ஏற்பட்டு வருகிறது.இந்த அமைப்புக்கு அதிகப்படியான நிதி வழங்கி வந்த அமெரிக்கா, வெளியேறப்போவதாக அறிவித்து விட்டது. இதனால் வரும் ஆண்டுகளில் நிதி நிலை மோசமாகும்.
இதை எதிர்பார்த்து, தங்களது நிறுவனத்தின் துறைகளை பாதிக்குப்பாதியாக குறைப்பது என்றும், பணியாளர்கள் செலவினத்தை கணிசமாக குறைப்பது என்றும் உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நிதிப் பற்றாக்குறையால் பல்வேறு நாடுகளில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ சேவைகள், பாதிக்கப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. 'நிதி பங்களிப்புக்கு இனி சீனாவை நம்ப வேண்டியது இருக்கும்' என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.