உலகளாவிய ஹீலியம் தட்டுப்பாடு; கனடாவின் சுகாதாரத் துறை மற்றும் வர்த்தகங்கள் பாதிக்கும் அபாயம்!
கொண்டாட்டங்களுக்கான அலங்காரத் துறை முதல் சுகாதாரத் துறை வரை, கடந்த இரு தசாப்தங்களில் ஐந்தாவது முறையாக ஏற்பட்டுள்ள உலகளாவிய ஹீலியம் தட்டுப்பாடு, கனடாவின் முக்கியத் துறைகளின் செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஹீலியம் வாயு, குறிப்பாக அதன் திரவ வடிவம், செமிகண்டக்டர் உற்பத்தி, விண்வெளி, பாதுகாப்புப் பயன்பாடுகள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் மருத்துவ இமேஜிங் (MRI) செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நாம் பெரும்பாலும் ஹீலியத்தை பலூன்களுக்கான ஒரு புதுமையான பொருளாகவே நினைக்கிறோம், ஆனால் அது உண்மையல்ல என்று கனடாவின் ஹீலியம் உருவாக்குநர்கள் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரிச்சர்ட் டன் குறிப்பிட்டுள்ளார்.

நமது வாழ்க்கை முறைக்கு அவசியமான பல உயர்தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கு இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தில் உள்ள தடைகள் மற்றும் கட்டாரில் உள்ள உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக உலக ஹீலியம் விநியோகத்தில் மூன்றில் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.
MRI இயந்திரங்களைக் குளிர்விக்க திரவ ஹீலியம் முக்கியப் பங்கு வகிப்பதால், கனடாவின் சுகாதாரத் துறை இந்த உலகளாவிய தட்டுப்பாட்டை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
கடந்த மாதம், சஸ்காட்செவனின் சுகாதார அதிகார சபைக்கு அதன் விநியோகஸ்தர் மூலம் தட்டுப்பாடு காரணமாக ஹீலியம் ஒதுக்கீடு பாதியாகக் குறைக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போது தங்களுக்கு வழமையான மருத்துவ ஹீலியம் விநியோகம் கிடைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் ஹீலியம் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயத்தை காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.