கனடாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும்
கனடாவில் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விவசாயிகளின் லாபம் கடுமையாகக் குறைந்து வருகிறது.
இதன் எதிரொலியாக, விரைவில் நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என மளிகைக் கடை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரின்ஸ் ஒப் எட்வர்ட் மாகாணத்தில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 2.44 டொலராக உயர்ந்துள்ளது. இது கனடாவின் தேசிய சராசரி விலையை விட சுமார் 17 சென்ட்கள் அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.

வருடத் தொடக்கத்தில் இந்த திடீர் விலை உயர்வை விவசாயிகள் எதிர்பார்க்கவில்லை.
தற்போதைக்கு இந்த கூடுதல் செலவை விவசாயிகளே சகித்துக் கொண்டாலும், நீண்ட காலத்திற்கு இதைத் தொடர முடியாது என்று ஹேக்மேன் கூறுகிறார்.
புல் வெட்டுவதற்கும் தீவனம் அறுவடை செய்வதற்கும் ஒப்பந்தக்காரர்கள் வசூலிக்கும் கட்டணம் உயர்ந்துள்ளது. விவசாய உபகரணங்கள் மற்றும் தீவனப் பதப்படுத்துதலுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.
இந்த செலவு உயர்வை நாங்கள் சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்த கட்டங்களுக்கு மாற்ற வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா அரசாங்கத்தின் புதிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மூலம் எதிர்காலத்தில் போக்குவரத்துச் செலவுகள் குறைய வாய்ப்புள்ள போதிலும், மளிகைப் பொருட்களின் விலை உடனடியாகக் குறையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாயிகள் இந்த கூடுதல் சுமையை நுகர்வோர் மீது எப்போது சுமத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நடப்பு ஆண்டு இறுதிக்குள் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக மாறக்கூடும்.