மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ ; 31,000 பேரை வெளியேற உத்தரவு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மீண்டும் காட்டுத்தீ பரவ துவங்கியதால், 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடல் நீரால் தீயை அணைக்கும் முயற்சி
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அண்டை மாகாணங்களில் இருந்து தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் வாயிலாக, கடல் நீரால் தீயை அணைக்கும் முயற்சிகளும் நடந்தன. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, தீயை அணைக்கும் முயற்சி முன்னேற்றம் அடைந்தது.
இந்நிலையில் தற்போது, மீண்டும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கே வடக்கே, காட்டுத்தீ பரவ துவங்கி உள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சில மணி நேரத்தில் 8,000 ஏக்கருக்கும் (3,200 ஹெக்டேர்) அதிகமான பரப்பளவுக்கு தீ வேகமாக பரவியது. காட்டுத்தீ பரவ துவங்கியதால், 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்பகுதியில் வசிக்கு மக்களுக்கு, அவசர எச்சரிக்கை விடுத்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து, வானிலை ஆய்வாளர் டேனியல் ஸ்வைன் கூறுகையில், காட்டுத்தீ பரவி வருவது மிகவும் கவலைக்குரியது. அதிகமான ஹெலிகாப்டர்கள் உள்ளன. இது தான் நல்ல செய்தி. கெட்ட செய்தி என்னவென்றால், காற்று அதிகமான அளவு வீசும். தெற்கு கலிபோர்னியாவில், எட்டு மாதங்களில் பெரிய மழைப்பொழிவு எதுவும் இல்லை. இதனால் கிராமப்புறங்கள் வறண்டு போகின்றன என கூறியுள்ளார்.