ஈரான் - அமெரிக்க நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறுமா? இஸ்லாமாபாத்தில் நிலவும் மர்மம்
ஈரான் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் நேரடியாகச் சந்தித்துப் பேசுவார்களா என்பது குறித்து இரு நாடுகளும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதால், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய அரச ஊடகமான 'IRIB', அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானில் அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

"ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு விடயங்கள் குறித்து ஆராயவே அவர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார்.
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரானின் கருத்துக்களைப் பரிமாறும் ஒரு 'பாலமாக' மாத்திரமே பாகிஸ்தான் செயல்படும்" என ஈரான் தரப்பு விளக்கமளித்துள்ளது.
ஈரானியத் தரப்பினர் "நேரில்" பேச விரும்புவதாகத் தெரிவித்ததாலேயே, ஜனாதிபதி ட்ரம்ப்பின் விசேட தூதுவர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் இஸ்லாமாபாத் அனுப்பப்பட்டதாக வெள்ளை மாளிகை முன்னதாகத் தெரிவித்திருந்தது.
'ABC News' வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்க மற்றும் ஈரானியப் பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தனித்தனியான சந்திப்புகளை முன்னெடுக்கவுள்ளனர்.
பாகிஸ்தான் அதிகாரிகளுடனான இந்தத் தொடக்கக் கட்டப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தால் மாத்திரம், ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதுவர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.