வெனிசுலா, கிரீன்லாந்தைத் தொடர்ந்து கனேடியர்களுக்கு அமெரிக்காவால் சிக்கல் ஏற்படுமா?
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்துள்ளார், கிரீன்லாந்தைப் பிடிக்கப்போவதாக கூறிவருகிறார்.
அத்துடன், கொலம்பியா ஜனாதிபதி மற்றும் மெக்சிகோ போதைக்கும்பல் விடயங்களிலும் தலையிடப்போவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டியிருப்பதால், கனடாவுக்கும் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது!

Credit : EPA
ஐ.நா அமைப்புக்கான முன்னாள் தூதரான பாப் ரே (Bob Rae), அமெரிக்க ஆக்கிரமிப்புப் பட்டியலில் கனடா இல்லை என கனேடியர்கள் எண்ணுவார்களானால், அது தவறான எண்ணமாகும் என்று கூறியுள்ளார்.
மேலும், ட்ரம்ப் நிர்வாகம், கனடாவின் இறையாண்மையை சீரியஸாக எடுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஆடம் கோர்டன் (Adam Gordon) என்னும் Royal Roads பல்கலை பேராசிரியரும், ட்ரம்ப் நிர்வாகம் கனடாவுக்கு எதிராக உண்மையாகவே ராணுவ நடவடிக்கை எடுக்கும் அபாயம் உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் அதிகமாகிக்கொண்டே வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Credit : THE CANADIAN PRESS/Sean Kilpatrick
ட்ரம்ப் வெனிசுலா விடயத்தில் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளாரென்றால், கனடா மீதும் அவர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள ஆடம், ஆகவே, நாம் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இப்படி, சில நிபுணர்கள் ட்ரம்ப் கனடாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என கருத்து தெரிவித்துள்ள நிலையில், கனடா பிரதமரான மார்க் கார்னி மற்றும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவருக்கும் ஆலோசகராக பணியாற்றியவரான ஜெரால்ட் பட்ஸ் (Gerald Butts) என்பவர், வர்த்தக பேச்சுவார்த்தைகளில் கனடாவை விட அதிக செல்வாக்கு பெற ட்ரம்ப் நிர்வாகம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும், அதில் கனேடிய அரசியலில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதும் அடங்கும் என்றும், ஆனாலும், ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் அதில் இருப்பதாக தான் கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.