கனடாவில் சந்தேக நபரை தேடி வரும் பொலிஸார்
கனடாவின் வின்ட்சர் நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் நபர் ஒருவர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, சந்தேகநபரை அடையாளம் காண்பதற்குப் பொதுமக்களின் உதவியை வின்ட்சர் பொலிஸார் நாடியுள்ளனர்.
கடந்த நவம்பர் 8ஆம் திகதி அதிகாலை 2:30 மணியளவில், பெலிசியர் வீதி மற்றும் மேற்கு சதாம் வீதி ஆகியவற்றுக்கு அருகில் இரண்டு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது எதிர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதில், நபர் ஒருவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் அவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகநபரின் குழுவினர் ஓலெட் அவென்யூ வழியாகத் தெற்கு நோக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.
தேடப்படும் சந்தேகநபரின் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 20 முதல் 30 வயதுக்குட்பட்ட, மாநிறம் கொண்ட கறுப்பின ஆண் எனவும், நீளமான சடைமுடியை போனிடெயில் பாணியில் கட்டியிருந்தார் எனவும் கறுப்பு நிற டி-ஷேர்ட், பழுப்பு நிற ஜாக்கெட், சாம்பல் நிற காற்சட்டை, கறுப்பு நிறக் காலணிகள் மற்றும் கழுத்தில் சங்கிலி அணிந்திருந்தார்.
சந்தேகநபர் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் வின்ட்சர் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.