இரு சிறார்களுடன் மலை உச்சியில் இருந்து காருடன் பாய்ந்த இந்தியர்: வெளிநாட்டில் சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரு சிறார்களுடன் மலை உச்சியில் இருந்து காருடன் பாய்ந்த இந்தியர் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பிய அந்த இந்தியர் மீது கொலை முயற்சி, சிறார் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் கலிபோர்னியா பிரதானசாலை ரோந்து பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தர்மேஷ் பட்டேல் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் இருப்பதாகவும், அதன் பின்னர் சான் மேடியோ மாவட்ட சிறையில் அடைக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து தரவுகளை சேகரிக்கவும் சாட்சிகளை விசாரணை செய்யவும் இரவு முழுவதும் செலவிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதுவரையான விசாரணையில், இது திட்டமிட்ட நடவடிக்கை நென்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் போது பட்டேலுடன் இன்னொருவரும் அந்த காரில் பயணித்துள்ளார். மேலும், 4 வயது சிறுமி மற்றும் 9 வயது சிறுவன் ஆகியோரும் அந்த வாகனத்தில் இருந்துள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினரா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
76 மீற்றர் மலை உச்சியில் இருந்து விழுந்த வாகனத்தில் இருந்து நால்வரும் காயங்களுடன் தப்பியது அதிசயம் என்றே பொலிசார் கூறுகின்றனர். விபத்தை அடுத்து நால்வரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவே கூறப்பட்டது, ஆனால் அதிர்ஷ்டவசமாக நால்வரும் உயிர் தப்பியுள்ளனர்.
திங்களன்று பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் நேரடி சாட்சிகள் சிலர் சுமார் 10.30 மணியளவில் 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளனர்.
அதன் பின்னர் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னரே, சிறார்கள் உட்பட நால்வரையும் பொலிசார் மீட்டுள்ளனர்.