விமானத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்... கட்டுநாயக்காவில் சிக்கினர்!
அபுதாபியிலிருந்து வந்த விமானத்தின் விமானியின் பயணப் பொதிகளை கொள்ளையடித்துவிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பியோடியதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் வத்தளை - ஹுனுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த குறித்த பெண், அபுதாபியில் இருந்து எதிஹாட் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் விமானத்தில் இன்றையதினம் (29-10-2024) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சோதனை நடவடிக்கைகளை முடித்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்குக் குறித்த விமானி தயாரானபோது அவரது பயணப்பை காணாமல் போனமை தெரியவந்தது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளால் கண்காணிப்பு கெமரா ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, விமானத்திலிருந்து முதலில் இறங்கிய பெண் ஒருவர் விமானியின் பையை எடுத்துத் தமது பைகளுக்குள் மறைத்து வைத்தமை அவதானிக்கப்பட்டது.
அதன்பின்னர், அவர் முச்சக்கரவண்டி ஒன்றில் அங்கிருந்த சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, குறித்த முச்சக்கரவண்டியைக் கண்டுபிடித்த பொலிஸார், முச்சக்கரவண்டி சாரதியின் தகவலின் அடிப்படையில் வத்தளை - ஹுனுப்பிட்டியவில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று விமானியின் பையைக் கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.