கனடாவில், சிறுவனைக் கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளருக்கு தண்டனை அறிவிப்பு!
கனடாவின் எட்மண்டன் நகரில் 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் கொன்ற வழக்கில், நாய்களின் உரிமையாளரான கிரிஸ்டல் மெக்டொனால்ட் என்பவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் மாதம், கிரிஸ்டலுக்குச் சொந்தமான இரண்டு 'கேன் கோர்சோ' ரக நாய்கள் தாக்கியதில் கேச் கிரிஸ்ட் என்ற 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவத்தில் 'மரணத்தை விளைவித்த குற்றவியல் அலட்சியம்' இழைத்ததாகக் கூறி, கடந்த மே மாதம் கிரிஸ்டலை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.

புதன்கிழமை நடைபெற்ற தண்டனை தொடர்பான விசாரணையின் போது, கிரிஸ்டல் மன்றத்தில் கண்ணீருடன் பேசினார். சிறுவனின் இழப்பிற்குப் பிறகு தான் கடுமையான குற்ற உணர்ச்சி, துக்கம் மற்றும் அவமானத்தைச் சுமந்து வருவதாகத் தெரிவித்தார். "நான் தினமும் அவனைப் பற்றியே நினைக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தாயாருடன் வசித்து வந்த கேச், வசந்த கால விடுமுறையைக் கழிப்பதற்காக எட்மண்டனின் சம்மர்சைட் பகுதியில் வசித்து வந்த தந்தை வெஸ்லியைச் சந்திக்க வந்திருந்தான். அப்போது வெஸ்லி, கிரிஸ்டலுடன் ஒரே வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தார்.
தந்தையான வெஸ்லி வீட்டின் கரேஜில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சிறுவன் வீட்டிற்குள் வீடியோ கேம் விளையாடச் சென்றுள்ளான்.
45 நிமிடங்களுக்குப் பிறகு வெஸ்லி வீட்டிற்குள் சென்றபோது, சமையலறைத் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை இரு நாய்களும் சூழ்ந்திருந்தன.
சிறுவன் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான கடி காயங்களால் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த இரண்டு நாய்களும் தயைக்கொலை செய்யப்பட்டன.
சிறுவன் கேச் கொல்லப்படுவதற்கு முன்பே, இந்த நாய்கள் இரண்டு செல்லப் பிராணிகளைக் கொன்றதுடன், உரிமையாளர் கிரிஸ்டல் உட்பட மூன்று பெரியவர்களைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தன என்பது விசாரணையில் அம்பலமானது.
ஆல்பர்ட்டா உயர் நீதிமன்ற நீதிபதி எரிக் மேக்லின் பயிற்சியற்ற மற்றும் ஆபத்தான இந்த நாய்களிடமிருந்து சிறுவன் பாதிக்கப்படுவதைத் தடுக்க கிரிஸ்டல் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கண்டித்திருந்தார்.
சிறுவனின் தந்தை வெஸ்லி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது, கேச் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நபர் எனக் கூறி உருக்கமடைந்தார்.
எனினும், கிரிஸ்டலைச் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். "கூடுதல் தண்டனையோ அல்லது சிறைவாசமோ ஏற்கனவே நடந்த இழப்பைச் சரிசெய்துவிடாது" என அவர் கூறினார். இவ்வழக்கின் இறுதித் தண்டனைத் தீர்ப்பை நீதிபதி எரிக் மேக்லின் இன்று வழங்கவுள்ளார்.