கார் சாரதியாக பணியாற்றினேன்: ரஷ்ய ஜனாதிபதி புடின் வெளிப்படை
ரஷ்ய ஜனாதிபதி புடின் கார் சாரதியாக பணியாற்றியுள்ளார் என்கிற தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோவியத் ஒன்றியம் கடந்த 1991ம் ஆண்டு வீழ்ச்சியடைந்த நிலையில், ரஷ்யா உட்பட பல்வேறு குடியரசு நாடுகள் உருவாகின. சோவியத் ஒன்றியத்தின் உளவு படையில் பணியாற்றிய ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி புடின், தற்போதும் சோவியத் ஒன்றியத்தின் கோட்பாடுகளை நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை மிகப்பெரும் அரசியல் பேரழிவாகவும் அவர் கருதுகிறார். இந்த நிலையில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியின் போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக தாம் கார் சாரதியாக பணியாற்றியதாக புடின் தற்போது தெரிவித்துள்ளார்.
சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி குறித்த ஆவணப்படம் ஒன்றில் புடின் இதனை தெரிவித்துள்ளார். அதில், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது குறித்துப் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுதான் நடந்தது. அதுதான் உண்மை.
சோவியத் ஒன்றியத்தின் சரிவு என்பது வரலாற்று ரஷ்யாவின் முடிவை உணர்த்துகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சோவியத் யூனியன் வீழ்ச்சி என்பது பெரும்பாலான பொதுமக்களுக்கு மிகப் பெரிய சோகமாகவே இருந்தது.
அந்த நேரத்தில் நான் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. அதற்காக நான் தனியார் நிறுவனத்தில் கார் சாரதியாக பணியாற்றினேன் என அதில் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் சக்தி வாய்ந்த தலவர்களில் ஒருவராக கருதப்படும் புடின், 30 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடியால் கார் சாரதியாக பணியாற்றினார் என்பது வியப்பாகவே பார்க்கப்படுகிறது.