ஒரு நாள் முதல்வரான கல்லூரி மாணவி! எங்கு தெரியுமா?
சினிமாவில் மட்டுமே சாத்தியமான சில நிகழ்வுகள் தற்போது நிஜத்திலும் நடந்துள்ளது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டத்தில் சிருஷ்டி கோஸ்வாமி என்ற 19 வயது இளம் பெண் கல்லூரியில் இளங்கலை வேளாண்மை படித்து வருகிறார். அத்துடன் இவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதல்வராகவும் பொறுப்பில் இருக்கிறார்.
குழந்தைகள் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செய்திருக்கிறார். இந்நிலையில் இன்று (ஜனவரி 24) தேசிய பெண் குழந்தைகள் தினம், இதனை முன்னிட்டு சிருஷ்டி கோஸ்வாமியை ஒரு நாள் முதல்வராக பணியில் அமர்த்தி கௌரவப்படுத்தவும், பெண்களை ஊக்கப்படுத்தவும் அம்மாநில அரசு திட்டமிட்டது. அதன்படி, ஒரு நாள் முதல்வர் என்ற சிறப்புப் பதவி சிருஷ்டி கோஸ்வாமிக்கு வழங்கப்பட்டது.
அதற்கு முன்னதாக, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தங்களின் திட்டம் குறித்து தலா 5 நிமிடம் காணொளி காட்சி மூலம் அவருக்கு விளக்கம் அளித்தனர். அம்மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான கெய்சனில் இருந்து மாநிலத்தை நிர்வாகம் செய்த அவர், அரசின் பல்வேறு திட்டங்களை மதிப்பாய்வு செய்தார்.
அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலாத் துறையின் ஹோம்ஸ்டே திட்டம் உள்ளிட்ட பிற திட்டங்களின் பணிகளையும் மேற்பார்வையிட்டார். சிருஷ்டி முதல்வராகச் செயல்பட்ட போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருந்தார்.
அங்கு இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்துவதற்காக ஒருநாள் ,ஆட்சியர், ஒருநாள் காவல் ஆணையர் போன்ற பதவிகளில் உட்கார வைக்கப்பட்டு மரியாதை செய்வது வழக்கம் எனினும் ஒரு நாள் முதல்வர் என்று யாரையும் இதுவரை நியமித்தது இல்லை.
இவ்வாறான நிலையில் முதன்முறையாக இந்தியாவில் ஒரு நாள் முதல்வராகப் பதவி வகித்து ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் இந்த 19 வயது மாணவி. மேலும் முதல்வர் பதவி பொறுப்பேற்பதற்கு முன்னதாக பேசிய சிருஷ்டி , இதனை தன்னால் நம்ப முடியவில்லை.
என்னால் இயன்றதைச் செய்வேன். மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது பணி இருக்கும்” என்றும் தெரிவித்தார்.