பாஸ்போர்ட்டுடன் விசாவை இணைப்பதற்காக சென்ற இந்திய இளம்பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!
தனது பாஸ்போர்ட்டுடன் விசாவை இணைப்பதற்காக இந்திய இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க, அவருக்கு எதிர்பாராத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த 29 வயதுடைய பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக நெதர்லாந்தில் தங்கி கல்வி பயின்று வருகிறார். அடுத்து உயர் கல்விக்காக பிரித்தானியா செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக தனது விசாவை பாஸ்போர்ட்டுடன் இணைப்பதற்காக இந்தியாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றை அவர் நாடியுள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.
அது அயர்லாந்தின் தலைநகரான டப்ளினிலிருந்து வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் 1234.38 யூரோக்களுக்கான பில் ஒன்று இணைக்கப்பட்டிருந்திருக்கிறது.
அது ஒரு ஹொட்டல் பில். உடனடியாக சம்பந்தபட்ட ஹொட்டலை தொடர்பு கொண்டிருக்கிறார் அவர். நடந்தது என்னவென்றால், யாரோ ஒருவர் அந்த பெண்ணின் பாஸ்போர்ட் தகவல்களைப் பயன்படுத்தி அயர்லாந்திலுள்ள ஹொட்டல் ஒன்றில் 5 நாட்களுக்கு அறை எடுத்திருக்கிறார்கள்.
அதன் பில்தான் அந்த பெண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, விசா முத்திரையிடுவதற்காக கொடுக்கப்பட்ட தனது பாஸ்போர்ட் தவறாக பயன்படுத்தப்பட்டு, தனது அடையாளம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் புகாரளித்திருக்கிறார்.
அந்த பெண்ணின் பெற்றோர் இந்தியாவிலுள்ள மும்பையில் வாழ்ந்துவரும் நிலையில், மும்பை பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸார் இந்த அடையாளத் திருட்டு தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.