கனடா செல்லவிருந்த இளைஞன் சடலமாக மீட்பு... அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் முல்லைத்தீவு - யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த 27 வயதான ஆனந்தரசா ஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு நேற்றையதினம் (30-07-2024) சடலமாக அதிகாலை மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (29) இரவு சுமார் 20 இலட்சம் ரூபா பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளம் சென்ற குறித்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில் நேற்று வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்து சடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் ஏச் மக்ரூஸ் உடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்றையதினம் (31) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் முடிவில் குறித்த இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.