டொராண்டோ பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச் சூடு: ஓருவர் பலி
கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகம் (UTSC) அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிலிட்டரி ட்ரெயில் – ஓல்ட் ரிங் ரோடு பகுதியில் கடுமையாக காயமடைந்த ஒருவர் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடம் ஹைலண்ட் கிரீக் ட்ரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் இருப்பதாக காவல்துறை உறுதிப்படுத்தியது.

சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஒருவரை பொலிஸார் கண்டுபிடித்தனர் எனவும் பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட நபரின் அடையாளம் அல்லது துப்பாக்கிச்சூட்டுக்கான காரணங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அவசர மருத்துவ சேவைகள் (Paramedics) சம்பவ இடத்துக்கு சென்றிருந்தாலும், எவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என தெரிவித்துள்ளன.
பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள “காடுகளுடன் கூடிய பகுதியில்” துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் இதனைத் தொடர்ந்து, டொராண்டோ காவல்துறையுடன் இணைந்து பல்கலைக்கழகம் உடனடி நடவடிக்கைகளை எடுத்ததாகவும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்கார்பரோ வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததுடன், போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த முடக்கம் பின்னர் நீக்கப்பட்டது.