டின்களில் அடைக்கப்பட்ட காய்கறி இறக்குமதிக்கு கனடா 10% வரி விதிப்பு!
கனடாவின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் களையும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அடைக்கப்பட்ட காய்கறிகளுக்கு 10 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக கனடா நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், கனடாவின் சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகளின் காரணமாக அமெரிக்கா, மெக்சிகோ, இஸ்ரேல், சிலி மற்றும் வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டின் காய்கறிகளுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் டின் காய்கறி இறக்குமதியால் கனடாவின் உள்நாட்டு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றனவா என்பது குறித்து 'கனடிய சர்வதேச வர்த்தக தீர்ப்பாயம்' தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணை முடியும் வரை, அதிகபட்சமாக 200 நாட்களுக்கு இந்த வரி விதிப்பு தற்காலிகமாக அமலில் இருக்கும் என்று நிதியமைச்சு அதன் அறிக்கையில் விளக்கியுள்ளது. இந்தத் தீர்ப்பாயம் தனது விசாரணையை வரும் செப்டம்பர் 9 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, இறக்குமதியால் கனடிய காய்கறி உற்பத்தியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தீர்ப்பாயம் தெரிவித்தால், இந்த வரி விதிப்பு உடனடியாக ரத்து செய்யப்படும்.
இந்த தற்காலிகப் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம், எங்கள் நாட்டின் டின் காய்கறித் துறைக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கனடிய மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் நியாயமான விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்யும் ஒரு சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்வதே எங்கள் முக்கிய முன்னுரிமையாகும் என நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் குறிப்பிட்டுள்ளார்.