உக்ரேன் போரில் 100 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு
உக்ரேனுக்கு எதிரான ரஷ்யப் போரில் இந்த மாத தொடக்கத்தில் பங்கெடுத்ததிலிருந்து குறைந்தது 100 வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
நாட்டின் தேசிய புலனாய்வு சேவையால் நடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சுங்-க்வோன் (Lee Sung-kwon) இதனைக் கூறினார்.
மேலும், உக்ரேனுடனான மோதலில் ரஷ்யாவுக்கு உதவிய ஆயிரம் வடகொரிய வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்களில் உயர்மட்ட அதிகாரிகள் அடங்குவதாகவும், வடகொரிய படையினருக்கு அங்குள்ள நிலப்பரப்பு மற்றும் ட்ரோன் போர் முறைகள் பற்றிய பரிச்சயம் இல்லாமையினால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் லீ சுங்-க்வோன் சுட்டிக்காட்டினார்.
வட கொரியாவின் உயிரிழப்புகள் பற்றிய முதல் அறிக்கை இந்த வார தொடக்கத்தில் வந்தது.
ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவ வடகொரியா 10,000 வீரர்களை அனுப்பியது கடந்த ஒக்டோபர் மாதம் வெளிப்பட்டது.
எனினும் ரஷ்யாவோ அல்லது வடகொரியாவோ போருக்காக படையினர் அனுப்பப்பட்டதை ஒப்புக் கொள்ளவில்லை.