ஒரே ஆண்டில் கனடாவில் 10,000 பேர் கருணைக்கொலை?
ஒரே ஆண்டில் கனடாவில் சுமார் பத்தாயிரம் பேர் சுய விருப்பத்தின் அடிப்படையில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டில் கனடாவில் மொத்தமாக 10064 பேர் மருத்துவ உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இவ் விடயம் கனடாவின் மத்திய அரசாங்கத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் சுய விருப்பின் அடிப்படையில் மருத்துவ உதவியுடன் கருணை கொலை செய்யப்பட்டோர் எண்ணிக்கை 32 வீத உயர்வினை பதிவு செய்துள்ளது.
கடனாவில் கடந்த 2021ம் ஆண்டின் மொத்த மரணங்களில் 3.3 வீதம் மருத்துவ உதவியுடனான கருணைக்கொலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கியூபெக் மாகாணத்தில் இந்த எண்ணிக்கை 4.7 வீதமாகவும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 4.8 வீதமாகவும் அமைந்துள்ளது.
சுய விருப்பின் அடிப்படையில் மருத்துவ உதவியுடனான கருணைக்கொலைகள் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது என ரொறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியர் டுருடோ லெமின்ஸ் தெரிவித்துள்ளார்.
பெண்களை விடவும் ஆண்களே அதிகளவில் இவ்வாறு கருணைக்கொலைக்கு உட்படுகின்றனர் எனவும், சராசரியாக 76 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகளவில் இவ்வாறு கருணை கொலைக்கு உட்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புற்று நோய் எற்பட்டவர்களே அதிகளவில் இவ்வாறு கருணைக் கொலைக்கு உட்பட்டுள்ளனர்.