கனடாவில் வலி நிவாரணி மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு
கனடாவில் ஆக்சிகோடைன் (Oxycodone) கலந்த வலி நிவாரணி மருந்துகளின் பற்றாக்குறை அடுத்த ஆண்டுவரை நீடிக்கும் என மருந்தக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதே சமயம், கோடீன் (Codeine) கலந்த மற்றொரு வகை வலி நிவாரணி மருந்துகளின் விநியோகம், கோடை காலத்தில் ஏற்பட்ட தேசிய அளவிலான தடங்கலுக்குப் பின்னர், தற்போது மேம்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம், ஆக்சிகோடைன் மற்றும் அசிடமினோஃபென் (Acetaminophen) கலந்த மருந்துகளான பலரும் அறிந்த பெயரான பெர்கோசெட் (Percocet) உள்ளிட்டவை பற்றாக்குறை குறித்த அறிவிப்பை கனடிய சுகாதார திணைக்களம் வெளியிட்டது.

மருந்துகளுக்கு தட்டுப்பாடு
இதனுடன், டைலனோல் 3 (Tylenol 3) என அறியப்படும் கோடீன் கலந்த மருந்துகளிலும் பற்றாக்குறையாக காணப்பட்டது. இந்த பிரச்சனை உற்பத்தி தடை காரணமாக ஏற்பட்டதாகவும், தொடக்கத்தில் இது இலையுதிர் காலத்துக்குள் சரியாகும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இம்மருந்துகள் திடீர் காயங்கள் முதல் நீண்டகால முதுகுவலி வரை பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படுகின்றன. கோடீன் கலந்த டைலனோல் 3 போன்ற மருந்துகள் மீண்டும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
ஆனால் டைலனோல் 2 மற்றும் 4 மருந்துகளின் விநியோகம் இன்னும் குறைவாகவே உள்ளதாக கனடிய மருந்தாளுநர் சங்கத்தின் தொழில்முறை விவகாரங்களுக்கான மூத்த இயக்குநர் சதாஃப் ஃபைசல் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ஆக்சிகோடைன் கலந்த மருந்துகளின் பற்றாக்குறை தொடர்ந்துகொண்டிருக்கிறது.