ஐக்கிய அரபு இராச்சியத்தில் கோர விபத்து ; 11 பேர் உயிரிழப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ராஸ் அல் கைமா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அல் வதன் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சு தனது உத்தியோகபூர்வ X கணக்கில் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலதிக தகவல்கள்
விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், நோயாளர்காவு வண்டி சேவையினர், சிவில் பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விபத்து இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், உயிரிழந்தவர்களின் தேசியத்துவம் மற்றும் விபத்தில் மேலும் எவரேனும் காயமடைந்துள்ளனரா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என அந்த நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், விபத்து தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா பகுதியில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து தீப்பற்றியதில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 30 பேர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களே கடந்துள்ள நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.